அரூர், செப்டம்பர் 23 | புரட்டாசி 07:
தருமபுரி மாவட்டம் அரூரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவரை சாதி பெயர் சொல்லி திட்டி, கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்மீது வழக்கு பதிவு செய்ய முயற்சிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. வட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ஆனந்தன், முத்து, மாவட்ட செயலாளர் சேகர், மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தீண்டாமைக்கு எதிராக தங்களது கோஷங்களை எழுப்பினர்.