தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காடுசெட்டிபட்டியில் பள்ளி நேரத்தில் வராத அரசு பேருந்தை கண்டித்தும், கூடுதல் பேருந்து இயக்கக் கோரியும் பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காடுசெட்டிபட்டியைச் சுற்றியுள்ள சூடானூர், கும்மனூர், நாகனூர், பரிகம் உள்ளிட்ட மலை கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மல்லுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அன்றாடம் காலை-மாலை என ஒரே ஒரு அரசு பேருந்தையே நம்பி மாணவர்களும் பொதுமக்களும் பயணம் செய்து வருகிறார்கள்.
ஆனால் அந்தப் பேருந்து அடிக்கடி நேரத்தில் வராததால், மாணவர்கள் பயணிக்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக காலை நேரத்தில் பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்வது கடினமாகியுள்ளது. இதனால், நேற்று காலை மாணவர்கள் ஆத்திரம் அடைந்து, அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் “பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி பயணம் செய்ய கூடுதல் பேருந்து இயக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
பஞ்சப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தீர்வு காணப்பட்டதால் மாணவர்கள் சாலை மறியலை கலைத்து சென்றனர். ஒரு மணி நேரம் நீடித்த இந்த மறியல் காரணமாக தருமபுரி–ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
.gif)

