பாலக்கோடு, செப்டம்பர் 5, 2025 (ஆவணி 20) –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சித்திரப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு பெருமாள் திருக்கோயில் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற தலம் ஆகும். இக்கோயில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழா நேற்று முன்தினம் கணபதி பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நாளான நேற்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேத பாராயணம் மற்றும் நான்கு கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ரக்ஷாபந்தனம், நாடிசந்தனம் நடைபெற்றதுடன் பூர்ணாஹதி நடந்தது.
பின்னர் யாகசாலையிலிருந்து புனித தீர்த்த கலசம் எடுத்து வந்து, கோயில் உச்சி கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்பு கலசத்திலிருந்து ஊற்றிய புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெருமாள் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டார். சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனையுடன் பெருமாள் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இவ்விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும் விழா குழுவினரும் சிறப்பாக செய்திருந்தனர்.
.gif)

