பென்னாகரம், செப்டம்பர் 25 | புரட்டாசி 09 :
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த வினோத் குமார், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சிவசங்கரன், நில அளவை ஒன்றிய சங்கத்தைச் சேர்ந்த குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட மனுக்களை முடிவு செய்ய போதிய கால அவகாசம் வழங்க வேண்டும், ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகளை உருவாக்குவதை தவிர்க்க வேண்டும், திட்ட முகாம்களில் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், மேலும் திட்டங்களில் செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 50க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நிறைவில், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் நாகவேணி நன்றியுரை வழங்கினார். மேலும், இன்று பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஓஜி அள்ளி ஊராட்சி, தித்தியோப்பன அள்ளி ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களை வருவாய் துறை ஊழியர்கள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.