தருமபுரி, செப்டம்பர் 25 | புரட்டாசி 09 :
தருமபுரி மாவட்ட வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பினர், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை முற்றிலும் புறக்கணித்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தருமபுரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் ஒருங்கிணைந்த முறையில் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்ற வருவாய் துறை அதிகாரிகள், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட மனுக்களை பரிசீலிக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும், ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அதிகப்படியான பணி நெருக்கடிகளை தவிர்க்க வேண்டும், திட்ட முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், மேலும் திட்டங்களை செயல்படுத்த கூடுதல் பணியிடங்களும் அடிப்படை கட்டமைப்புகளும் அவசியம் ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
அதேபோல், பொதுமக்கள் சேவையை சிறப்பாக முன்னெடுக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் விரைவாக நிரப்ப வேண்டும். மேலும், அரசுப் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கான கருணை அடிப்படையிலான பணி நியமன உச்சவரம்பை தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 5% இலிருந்து மீண்டும் 25% ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனுடன், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதியை பாசலி ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டு “வருவாய் துறை தினம்” என அரசாணை வெளியிட வேண்டும் என்பதையும் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியது. இக்கோரிக்கைகள் அனைத்திற்கும் வலுசேர்க்க, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.