பொம்மிடி ரயில்வே மேம்பால பேருந்து நிறுத்தத்தில் இருந்து பழைய ஒட்டுப்பட்டி செல்லும் சிறிய அளவிலான ரயில்வே தரைமட்ட பாலம் பல ஆண்டுகளாக உள்ளூர் மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் இந்த பாதையை கம்பி தடுப்புகள் அமைத்து அடைக்க முயற்சி செய்வதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தரைமட்ட பாலம் வரை சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும், பாலத்தின் மறுபுறம் ஊர் எல்லை வரை இன்னும் மண்சாலையே உள்ளது. இதனால் அந்தப் பாதை முழுமையான சாலை வசதி இல்லாவிட்டாலும், மக்கள் தினசரி போக்குவரத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.
தற்போது ரயில்வே நிர்வாகம் கம்பி தடுப்புகள் அமைத்து இந்த பாதையை மூட முயற்சி செய்து வருகிறது. இதன் விளைவாக:
- சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன
- ஆரம்பப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது
- மக்கள் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மேம்பாலம் வழியாக மட்டுமே நடந்து செல்ல வேண்டிய சூழல்
- இது விபத்து அபாயத்தையும் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடும்
இந்த நிலையை கண்டித்து நாம் தமிழர் கட்சி – கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநில துணைத் தலைவர் பா. ஜெபசிங் தெரிவித்ததாவது:
"ரயில்வே நிர்வாகம் இந்த பாதையை அடைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். தமிழக அரசு ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். குறைந்தபட்சம் 5 அடி பாதையாவது மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
உள்ளூர் மக்கள், இந்த அத்தியாவசிய பாதையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், கம்பி தடுப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.