தருமபுரி – செப்டம்பர் 4, 2025 (ஆவணி 19)
தருமபுரி நகரப்பகுதியை ஒட்டியுள்ள வேடியப்பன் திட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழா கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, கங்கணம் கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து முளைப்பாரி, தீர்த்தக்குடம் அழைத்தல், மூன்றாம் கால யாக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றன.
முக்கிய நாளான நேற்று, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசக் கும்பங்களை தியாகராஜ தீக்ஷிதர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து, கோயில் உச்சியில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர்.
பின்னர் அந்த புனித நீர் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்பட்டதுடன், ஊர் மாரியம்மன் சாமிக்கு பால், தேன் மற்றும் வாசனை திரவியங்களில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அடுத்து சாமிக்கு மகாதீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.