தருமபுரி, செப்டம்பர் 20 | புரட்டாசி 04:
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே துர்கமலையில் அமைந்துள்ள அருள்மிகு சென்ன கேசவ பெருமாள் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புரட்டாசி சனிக்கிழமையையொட்டி குடும்பத்துடன் வந்த பக்தர்கள் துளசி தீர்த்தம் பெற்று விரதத்தை நிறைவு செய்தனர். சில பக்தர்கள் கோவிலில் நேரடியாக சமையல் செய்து உண்டு விரதம் முடித்தனர்.
விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், தங்களது வேண்டுதல்கள் நிறைவேற கோவில் மூலஸ்தான சுவரில் குங்குமத்தால் சக்கரம் வரைந்து வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நடைபெற்ற இவ்விழாவில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று ஆனந்த தரிசனம் செய்தனர்.