பாலக்கோடு, செப்டம்பர் 20 | புரட்டாசி 04:
ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளையும், வெங்கட்ராமனையும் வழிபடும் பாரம்பரியத்தை தொடர்ந்து, இவ்வாண்டு முதல் சனிக்கிழமையையொட்டி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சித்திரப்பட்டி அருள்மிகு ஸ்ரீபெருமாளப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக்கோயில் கடந்த மாதம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை தினந்தோறும் நடைபெற்று வரும் நிலையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலையிலேயே சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு பூக்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீபெருமாளப்பனை காண ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். துளசி தீர்த்தம் பெற்று விரதத்தை நிறைவு செய்தனர். மேலும், பக்தர்களுக்காக அன்னதானமும் வழங்கப்பட்டது.