பாலக்கோடு, செப்டம்பர் 05 (ஆவணி 20):
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிப்பாடு பக்தி பூர்வமாக நடைபெற்றது.
பிரதோஷ நாளையொட்டி, நந்தி பகவானுக்கு தேன், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து, பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
வேதமந்திரங்கள் முழங்க, சங்குகள் ஒலிக்க, வில்வம் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு நெய்வேதியங்களுடன் பிரசாதம் சமர்ப்பிக்கப்பட்டது. உற்சவமூர்த்திகள் மூன்று முறை ஆலயத்தைச் சுற்றி வந்தன. ஏராளமான பக்தர்கள் நந்தி பெருமானை வேண்டி அருள் பெற்றனர்.
பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவதால் முற்பிறவி பாவங்கள் நீங்கி, மரணபயம் விலகி, வளமான வாழ்க்கை கிடைக்கும் என்ற ஐதீகம் நிலவுகிறது. நிகழ்ச்சி நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.