பாலக்கோடு, செப்.2 | ஆவணி 17 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பஞ்சப்பள்ளி, நல்லாம்பட்டி, ஜிட்டாண்டஅள்ளி, காடுசெட்டிபட்டி போன்ற கிராமங்களில் பல ஏக்கர் நிலங்களில் சாமந்தி, மல்லிகை, அரளி, முல்லை, ரோஜா போன்ற பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் தருமபுரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
சாமந்திப்பூக்கள் பெரும்பாலும் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அதிக மகசூல் தரும் நிலையில், இந்த ஆண்டோ ஆவணி மாதத்திலேயே பூக்கள் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் சந்தையில் நல்ல தேவை உருவாகி, ஒரு கிலோ சாமந்தி ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையாகி, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், பூக்களை தூர இடங்களுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவினமும், நேர விரயமும் அதிகரித்து வருவதால் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாலக்கோட்டை மையமாக வைத்து அரசு பூ மார்க்கெட் அமைத்தால், விவசாயிகளுக்கு பெரும் நன்மை கிடைக்கும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகடூர்குரல் செய்திகளுக்காக பாலக்கோடு செய்தியாளர் #வேலு