பென்னாகரம், செப்டம்பர் 22 | புரட்டாசி 05:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இறைச்சி சந்தை வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படும் நிலையில், நேற்று (21.09.2025) புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக 2,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இறைச்சி வாங்க சந்தைக்கு வருவது வழக்கம். ஆனால் நேன்று வாடிக்கையாளர்கள் மிகக் குறைவாக இருந்ததால் பல கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. சில கடைகள் மட்டுமே திறந்து வியாபாரம் செய்தன.
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்து குடும்பங்கள் இறைச்சி சாப்பிடாமல் தவிர்க்கும் பாரம்பரியம் நீண்ட காலமாக நிலவுகிறது. குறிப்பாக சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிகமானோர் விரதம் இருந்து, கோயில்களில் வழிபாடு செய்வது வழக்கம். இதன் காரணமாக இறைச்சிக் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
வியாபாரிகள் தெரிவித்ததாவது: “பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல விற்பனை இருக்கும். ஆனால் புரட்டாசி மாதம் ஆரம்பித்தவுடன் எங்கள் கடைகளில் வியாபாரம் மிகக் குறைவாகி விடுகிறது. சிலர் மட்டுமே வாங்க வருகிறார்கள். மாதம் முடியும் வரை எங்களின் வருமானம் பாதிக்கப்படும்” என்றனர்.