ஒகேனக்கல், செப்டம்பர் 21 | புரட்டாசி 05:
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (21.09.2025) ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
நள்ளிரவு முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலிருந்தும் மக்கள் அதிக அளவில் ஒகேனக்கல் வந்தனர். காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 9,500 கனஅடி நீர் வரத்து இருந்தது. கரையோரம் மற்றும் அருவிகளில் நீராடி தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
பெருந்திரளான மக்கள் வருகையையொட்டி, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஊர்காவல்படை என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.