பாலக்கோடு அருகே இரவு நேரங்களில் லாரி பட்டறைகளில் டயர் திருட்டுகள் தொடர்ச்சியாக நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மூங்கப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே லாரி பாடி பில்டிங் பட்டறை நடத்தி வரும் கரிகாலன், கடந்த 8ம் தேதி இரவு பட்டறையை பூட்டி வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு, மினி சரக்கு வாகனத்தின் ஸ்டெப்னி டயர் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அவர் சி.சி.டி.வி காட்சிகளை பரிசோதித்ததில், இரவு சுமார் 10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் பட்டறைக்குள் நுழைந்து டயரை கழற்றி சென்றது பதிவாகியுள்ளது.
இதுபோலவே அதே இரவு, பாப்பாப்பட்டி கூட்ரோடு அருகே உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது பட்டறையிலும் மினி சரக்கு வாகனத்தின் டயர் திருடப்பட்டுள்ளது.
ஒரே இரவில் அடுத்தடுத்த இரண்டு பட்டறைகளில், சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள டயர்கள் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.