தருமபுரி, செப்டம்பர் 5, 2025 (ஆவணி 20) –
தருமபுரி மாவட்டம் செட்டிகரை ஊராட்சி நீலாபுரம் கொட்டாய் மேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன் மாரியம்மன் மற்றும் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா ஆன்மிகத் திருவிழா போல் வெகு விமர்சையாக நடைபெற்றது.
செப்டம்பர் 1 ஆம் தேதி திங்கட்கிழமை மங்கள இசை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, வாஸ்து சாந்தி, புற்றுமண் எடுத்தல், தீபாராதனை நடைபெற்றது.
செப்டம்பர் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு அஷ்டலட்சுமி ஹோமம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமங்கள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு பெண்கள் திரளாக பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
செப்டம்பர் 3 ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு பம்பை வாத்தியத்தின் முழக்கத்துடன் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு முதற்கால யாக பூஜை, மூலமந்திர ஹோமம் மற்றும் தீபாராதனை நடந்தது.
செப்டம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மங்கள இசையுடன் கோ பூஜை, தருண கணபதி பூஜை, இரண்டாம் கால யாக பூஜை மற்றும் ஷன்னவதி திரவிய ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பொன் மாரியம்மன் தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றன. பக்தர்களுக்கு புனித தீர்த்தம் மற்றும் மலர்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் சிறப்பாக செய்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கி பக்தர்களை மகிழ்வித்தனர்.