தருமபுரி மாவட்டம் செட்டிகரை ஊராட்சி மாதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஆன்மிகமும் ஆனந்தமும் கலந்த முறையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை ஆகியவற்றுடன் கொடியேற்றம் நடைபெற்று விழா தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு முளைப்பாரி, தீர்த்தகுடம் மற்றும் புதிய சிலை விக்கிரகங்கள் ஊர்வலம் நடைபெற்றது. அதே நாளில் மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை, ஸ்ரீ அங்காளம்மன் மூல மந்திர ஹோமம், துர்கா சுத்த ஹோமம், ஸ்ரீ சுத்தம் ஹோமம் மற்றும் உபசார பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு கோபுர கலச பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் ஸ்ரீ அங்காளம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கான மகா கும்பாபிஷேகம் நடந்தது. புனித தீர்த்தம் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டு, மலர் அலங்காரத்துடன் அங்காளம்மன் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு பக்தர்கள் ஆனந்தமடைந்தனர்.
- தருமபுரி செய்தியாளர் முருகேசன்