பாப்பிரெட்டிப்பட்டி, செப்டம்பர் 20 | புரட்டாசி 04:
இந்த முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அவர் முகாமில் நடைபெறும் மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை ஆய்வு செய்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற பேரவையில் அறிவித்ததன் பேரில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 30 உயர்தர மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற முகாமில் பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனைகள், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை (CMCHIS) பதிவு, மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வழங்குதல், ஆபா கார்ட் (ABHA Card) உருவாக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் பொது மருத்துவம், எலும்பு முறிவு, இதயநோய், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, குழந்தை நலம், பெண்கள் மற்றும் பிரசவம், கண், பல், காது-மூக்கு-தொண்டை, தோல், மனநலம், இயற்கை மருத்துவம், உணவியல் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்துகளை இலவசமாக வழங்கினர்.
கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், இதய நோயாளிகள், படுக்கையிலிருக்கும் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமையுடன் சேவைகள் வழங்கப்பட்டன. கண்புரை நோயாளிகள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த முகாமில் முன்னாள் அமைச்சர் முனைவர் திரு. பி. பழனியப்பன், இணை இயக்குநர் (மருத்துவம் & ஊரக நலப்பணிகள்) டாக்டர் சாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் ராஜேந்திரன், அரசு துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.