தருமபுரி, 16 செப்டம்பர் 2025 (ஆவணி 31)
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் ஸ்ரீ முனியப்பன் கோவிலில், நேர்த்திக்கடனுக்காக ஒரே நாளில் 151 ஆடுகளை பலியிட்டு, அங்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய சம்பவம் பக்தர்களை நெகிழச்சியடைய வைத்தது.
ஏரியூர் அருகே அத்திமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் தங்கராஜ், மனைவி அம்சா, இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மனைவிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறை நீண்ட காலம் சிகிச்சை பெற்றும் குணமளிக்கவில்லை. அப்போது தங்கராஜின் பெற்றோர், பென்னாகரம் பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவிலில் நேர்த்தி வேண்டுதல் வைக்குமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி, தங்கராஜ் "மனைவி குணமடைந்தால் 151 ஆடுகள் பலியிட்டு, பொதுமக்களுக்கு உணவுவிருந்து அளிப்பேன்" என வேண்டுதல் வைத்தார். பின்னர் மனைவி பூரண குணமடைந்ததைத் தொடர்ந்து, அவர் தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றி, கோவிலில் ஆடுகளை பலியிட்டு சமையல் செய்து, அங்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் கடன் சிக்கல், உடல்நலக்குறை, திருமண தோஷம், குழந்தை பாக்கியம், பில்லி, சூனியம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மார்கழி மாத இறுதி செவ்வாய் கிழமையன்று நடைபெறும் திருவிழாவிற்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், ஒரே நாளில் 151 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றி, அன்னதானம் வழங்கிய லாரி டிரைவர் தங்கராஜின் செயல், அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
.gif)

.jpg)