காரிமங்கலம், செப்டம்பர் 12 (ஆவணி 27):
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள், பெங்களூரில் இருந்து தருமபுரி வழியாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்திற்கும் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுக்க மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கும்பார அள்ளி தேசிய நெடுஞ்சாலை சோதனைச் சாவடியில் இன்று மாலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் குட்கா மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த வசந்த் மகோக்கர் சிங் (48) மற்றும் முரளி (38) என இருவரும் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.33 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ குட்கா மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.