அரூர், செப்டம்பர் 05 (ஆவணி 20):
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சங்கிலிவாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோயிலின் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மிகுந்த பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது. கடந்த 3ஆம் தேதி அதிகாலை மங்கள விநாயகர் பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்று விழா தொடங்கியது. பின்னர் கங்கணம் கட்டி, முளைப்பாரி உதைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை மங்கள இசையுடன் பூர்வாங்க பூஜை, மகா கணபதி ஹோமம், நவசக்தி ஹோமம், கோபூஜை மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.
வியாழக்கிழமை அதிகாலை, புனித நீர் தெளிக்கப்பட்டு ஸ்ரீமாரியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.வீரபத்திரன், முன்னாள் பொறுப்பாளர்கள் பி.ராஜா, கே.ராஜீ, எல்.கணேசன் மற்றும் நிர்வாகிகள் க.கரியபெருமாள், கு.தமிழரசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.