பென்னாகரம், செப்டம்பர் 12 (ஆவணி 27):
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் 4 அடுக்கு கொண்ட புதிய மகப்பேறு பிரிவு கட்டிடம் அமைக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைத்தார்.
புதிய கட்டிடம் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். சதீஷ் இன்று மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்த சேவையை பாராட்டினார். மேலும் கர்ப்பிணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது மனநிறைவு அடையும்படி மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் செல்பி பாயிண்ட், வரவேற்பறை, வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் போன்ற வசதிகளை ஏற்படுத்தியதையும் சிறப்பித்தார்.
ஆட்சியர் ஆர். சதீஷ் அவர்களே செல்பி பாயிண்ட்டில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் தேசிய தரச் சான்றிதழ் பெற பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மருத்துவமனை ஊழியர்கள் வில்லுப்பாட்டு பாடி சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மருந்துத் துறை இணை இயக்குனர் டாக்டர் எம். சாந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர் கனிமொழி உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.