தருமபுரி, செப்டம்பர் 22| புரட்டாசி 06:
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தேவரசம்பட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. கிராமத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் வழியாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் இந்த இரு மூலங்களிலும் நீர்விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று (21.09.2025) தேவரசம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தருமபுரி – சேலம் பைபாஸ் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தில், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் நீலமேகம் மற்றும் அதியமான் கோட்டை போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் முறையான குடிநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட RO நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக தருமபுரி – சேலம் பைபாஸ் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.