ஒகேனக்கல், செப் 2 | ஆவணி 17 -
கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக மாநில அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனுடன், தமிழக எல்லைப் பகுதிகளிலும் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தினமும் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி 43 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வலைத்துறை அதிகாரிகள், அடுத்த சில நாட்களில் நீர்வரத்து மேலும் உயரும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஒகேனக்கல் பகுதியில் உள்ள ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கத்தக்க அழகிய காட்சிகள் உருவாகியுள்ளன.
இதேவேளை, அதிகரித்து வரும் நீர்வரத்து காரணமாக காவிரி கரையோரப் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆற்றுப்பகுதியில் குளிப்பதும் படகு சவாரியும் மாவட்ட நிர்வாகத்தால் மூன்றாவது நாளாகத் தடை செய்யப்பட்டு வருகிறது.
- தகடூர்குரல் செய்திகளுக்காக #இர்பான்.

