தருமபுரி, செப்டம்பர் 23 | புரட்டாசி 06:
வருகிற செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்க உள்ள 7ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் “தருமபுரி வாசிக்கிறது” நிகழ்ச்சி, காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்நிகழ்வில் 1,616 பள்ளி, கல்லூரிகளில் 1,62,710 மாணவர்கள் பங்கேற்றனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் நோக்கம் என்றும், வாசிப்பின் மூலம் அறிவு வளர்ச்சி, நல்ல வாழ்க்கை மற்றும் நல்வழிப்படுத்தும் பண்பு கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நவீன தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாமல், மாணவர்கள் புத்தக வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும், வரவிருக்கும் 7ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்று, அறிவுசார் புத்தகங்களை வாங்கி வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி, மாவட்ட நூலக அலுவலர் திருமதி. கோகிலவாணி, தகடூர் புத்தகப் பேரவை தலைவர் திரு. இரா. சிசுபாலன், கல்லூரி முதல்வர் (பொ) திரு. ஜெயசீலன், ஒருங்கிணைப்பாளர் திரு. இ. தங்கமணி, பொருளாளர் திரு. மு. கார்த்திகேயன் உள்ளிட்டோர், மேலும் பல மாணவியர்கள் கலந்துகொண்டனர்.