பாலக்கோடு, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாவேரி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த புவனா (26) என்பவர், மோதுகுலஅள்ளியைச் சேர்ந்த சங்கருடன் கடந்த ஜனவரி 2024ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திலிருந்து இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், புவனா கணவரை பிரிந்து தாய்வீட்டில் தங்கியிருந்தார். மேலும், அவர் சங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், சங்கருக்கு மறுமணம் நடக்க இருப்பதை அறிந்த புவனா, கடந்த 21ம் தேதி கணவரின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டார். அப்போது சங்கரின் தாய் பழனியம்மாள் (45), பூபதி (33), சாந்தி (40) ஆகியோர் புவனாவுடன் தகாத வார்த்தைகளால் பேசிச் சண்டையிட்டதுடன், தாக்கியும், தாலியை பிடுங்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த புவனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புவனாவின் புகாரின் பேரில், பாலக்கோடு போலீசார் பழனியம்மாள், பூபதி, சாந்தி ஆகிய மூவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.