தருமபுரி நகர மையப்பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தையில் புதிய கடைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உழவர் சந்தை, 2021-2022 ஆம் ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்டு, தற்போது காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் உற்பத்திகளை நேரடியாக விற்பனை செய்யும் இந்த சந்தையில் ஏற்கனவே 74 கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் காய்கறி மற்றும் விவசாய பொருட்களை விற்பனை செய்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
ஆனால் போதிய கடைகள் இல்லாததால், சிலர் சாலையோரத்தில் கடைகள் அமைத்து விற்பனை செய்வதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, கூடுதல் கடைகள் கட்டித் தர வேண்டும் என விவசாயிகள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.28 இலட்சம் செலவில் 16 புதிய கடைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை ஆ. மணி அவர்களால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நகரமன்ற தலைவர் லட்சுமி மாது, ஆணையாளர் சேகர், நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர் பாண்டுரங்கன், பாலை அன்பு உள்ளிட்டோர் மற்றும் விவசாயிகள், நுகர்வோர் பலர் கலந்து கொண்டனர்.