தருமபுரி, செப்டம்பர் 24 | புரட்டாசி 08:
தருமபுரி மாவட்ட அஞ்சல் அலுவலக வளாகத்தில் வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி அவர்கள் முன்னிலையில் நாவல் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் சுற்றுச்சூழல் செழிப்பை மேம்படுத்தவும், காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிக்கவும் பசுமை தமிழ்நாடு இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நாவல் மரத்தின் முக்கியத்துவம் மற்றும் அதனால் கிடைக்கும் பல நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாவல் மரத்தின் பழம், விதை, இலை, மரப்பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டவை. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, விட்டமின் B, C போன்ற முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ள இந்தப் பழம், கொலஸ்ட்ராலைக் குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, புற்றுநோய் அபாயத்தை குறைக்க, ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த, கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் திரு. கா. இராஜாங்கம், இ.வ.ப., தருமபுரி அஞ்சல் கண்காணிப்பாளர் திரு. ராதா கிருஷ்ணன், துணை அஞ்சல் கண்காணிப்பாளர் திரு. ராகுல் ராவத், தருமபுரி CPC மேற்பார்வையாளர் திருமதி. கீதா, தொடர்புடைய அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Permalink: