தருமபுரி, செப்டம்பர் 24 | புரட்டாசி 08:
தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகள் இணையவழி குற்றங்களிலிருந்து தங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கான அகல்விளக்கு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. தலைமையில் இன்று (24.09.2025) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் பயிற்சியின் முக்கிய நோக்கத்தை விளக்கி கூறியதாவது:
2024–25 ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவை மானியக் கோரிக்கையின் அடிப்படையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9–12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவிகள் சமூக ரீதியாக ஏற்படும் இன்னல்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும், இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக கையாளவும் கல்வி வழங்கப்படும்.
இதற்கிடையில், மாவட்ட அளவில் அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அகல்விளக்கு பயிற்சி 23.09.2025 முதல் 25.09.2025 வரை ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பெண் ஆசிரியர் வழிகாட்டுதலுடன் நடக்கிறது. இதில் பெண்கள் தங்களின் அடையாளத்தையும் திறமையையும் வெளிப்படுத்தும் வழிகளை உணர்ந்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பயிற்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் (பொ) அவர்கள் சைபர் ஸ்டாக்கிங், சைபர் கூருமிங்பிக்சர், மார்பிங் மற்றும் பின்பற்றவேண்டிய 10 முக்கிய வழிமுறைகளை 210 ஆசிரியர்களுக்கு விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதி சந்திரா, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ): திரு. மாது, பேராசிரியர் திருமதி ப. சிலம்பரசி, மாவட்ட உதவி திட்ட கல்வி அலுவலர் திருமதி மஞ்சுளா, அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சுதா, மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் செல்வி கா. கன்னியம்மாள், திருமதி அ. விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டார்கள். விழிப்புணர்வு பயிற்சி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணையவழி பாதுகாப்பில் செயல்படுவதற்கான முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி நிறைவு பெற்றது.