தருமபுரி, செப்டம்பர் 27 | புரட்டாசி 11 :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி II & II-A பதவிகளுக்கான முதல்நிலை (OMR) தேர்வு, தருமபுரி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 28, 2025 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் மொத்தம் 65 தேர்வு மையங்களில், சுமார் 20,109 தேர்வர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். தேர்வினை கண்காணிக்க 4 பறக்கும் படை அலுவலர்கள், 14 நடமாடும் குழுக்கள் (Mobile Units), மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒருவர் வீதம் 65 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் எளிதில் மையங்களை அடைய சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையத்திற்குச் சரியான நேரத்தில் வருமாறு, தேர்வாணைய விதிமுறைகளை படித்து கடைபிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.