தருமபுரி, செப்டம்பர் 25 | புரட்டாசி 09 :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தெலுங்கானா முதலமைச்சர் திரு. அ. ரேவந்த் ரெட்டி அவர்கள் ஆகியோர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ”கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனும் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்ட விழாவையும், 2025-26 கல்வியாண்டிற்கான ”புதுமைப் பெண்” மற்றும் ”தமிழ்ப் புதல்வன்” திட்டங்களையும் இன்று தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில் காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார். இந்நிகழ்விற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்மூலம் படித்து, பின்னர் உயர்கல்வி தொடரும் மாணவர்களுக்கும் மாணவியருக்கும், மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி வழங்கும் திட்டங்களே புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் ஆகும். தருமபுரி மாவட்டத்தில் சுமார் 2,000 மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் இந்தத் திட்டங்களின் பயனாளர்களாக காணொலி காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா, முன்னாள் அமைச்சர் முனைவர். பி. பழனியப்பன், அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர். கோ. கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சேகர் உள்ளிட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.