தருமபுரி மாவட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி. இரவி தலைமையிலானார். இதில் மாநில தலைவர் ப. கி. பட்டாபிராமன் தற்போதைய அரசியல் நிலை குறித்து உரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
கூட்டத்தில் கடந்த கால வேலை அறிக்கைகள் மற்றும் எதிர்கால கடமைகள் குறித்து மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் விளக்கினார். மாவட்ட பொருளாளர் அலமேலு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இலட்சுமணன், வி. செல்வம், வெ. பை. மாதையன், ஜி. ராஜகோபால், எல்.சி. கிருஷ்ணன், எஸ். சாக்கன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. வாக்கு திருட்டை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். உதயமான திட்டத்தில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தல். மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை. கல்வித்துறைக்கான ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தல்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் கிராமப்புற ஊராட்சிகள், வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து எட்டு மாதங்கள் கடந்தும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமை காரணமாக குடிநீர், தெருவிளக்கு, சாலைவசதி, தூய்மைப்பணி போன்ற சேவைகள் முறையாக நடைபெறவில்லை. இதனால் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் உடனே நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் குடிநீர் குழாய்களில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படாமல் இருப்பதால் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 100 நாள் பணி முடித்த பணிதள பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும். முறையாக சட்டபடி சமூக தணிக்கை செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் தெரிவித்தார்.
மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வகையில் 26.09.2025 அன்று தருமபுரி மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவும் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.