அரூர் – ஆக. 26 (ஆவணி 10)-
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “உயர்வுக்கு படி” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வியில் சேராத பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கை ஆணைகளையும் வழங்கினார்.
தமது உரையில் ஆட்சித்தலைவர், “உயர்வுக்கு படி” நிகழ்ச்சி 12-ஆம் வகுப்பு தோல்வியுற்ற அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு மீண்டும் கல்விப் பாதையை அமைத்து தரும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுவதாகக் கூறினார். குடும்ப, பொருளாதார அல்லது சமூக காரணங்களால் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மீண்டும் கல்வி வாய்ப்பு அளிப்பதே திட்டத்தின் நோக்கம் எனவும், “நான் முதல்வன்”, “தமிழ்புதல்வன்”, “புதுமைப்பெண்” போன்ற திட்டங்கள் மாணவர்களுக்கு தடையின்றி உயர்கல்வி பயில உதவுகின்றன என்றும் விளக்கினார்.
அரூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மொத்தம் 90 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 17 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 4 மாணவர்கள் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகளில், 2 மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் Spot Admission மூலம் உடனடியாக சேர்க்கை பெற்றனர். மேலும், கல்வி உதவித்தொகை, தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டம், கல்வி கடனுதவி போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வது அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அவசியமானது என்பதையும், தற்காலிக சவால்களை மீறி கல்வியைப் பெற வேண்டும் என்பதையும் ஆட்சித்தலைவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. செம்மலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ஜோதிசந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி. ம. தீபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.