அரூர், ஆக 26 (ஆவணி 9) -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தை அறிவித்து தொடங்கி வைத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியம் கோட்டப்பட்டி ஸ்ரீ NSK மஹாலில் நடைபெற்றுவரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.08.2025) நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 60-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டாமாறுதலுக்கான ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள், மின்இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள் மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் உடனடியாக வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை வீட்டிற்கே சென்று கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை கடந்த 15.07.2025 அன்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ஜூலை 15 முதல் நவம்பர் 2025 வரை 10,000 முகாம்கள் நடைபெறும்.
தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 15 முதல் அக்டோபர் 3 வரை மொத்தம் 176 முகாம்கள் நடைபெற உள்ளது. நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசு துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இன்றைய தினம் அரூர் ஒன்றியத்தின் கோட்டப்பட்டி, நரிப்பள்ளி மற்றும் பையர்நாயக்கன்பட்டி ஊராட்சிகளுக்கான முகாம் கோட்டப்பட்டி NSK மஹாலில் நடைபெற்றது.
இம்முகாம்களில் உடனடியாக தீர்வு கிடைக்கக்கூடிய மனுக்கள் அங்கு தானே தீர்க்கப்படுகின்றன. அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு வழங்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை சிரமமின்றி வழங்க அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. செம்மலை, வட்டாட்சியர் திரு. பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.