பாலக்கோடு, ஆக. 22 | ஆவணி 6 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்தின் புலிக்கரை VPRC கட்டிடத்தில் இன்று (22.08.2025 – ஆவணி 6) “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முகாமில் நேரில் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மக்களின் தேவைகளை உடனுக்குடன் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழிமுறைகள் அளித்தார்.
இந்த முகாமில், பட்டா மாற்ற ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், வேலை அடையாள அட்டைகள் போன்ற பல்வேறு அரசு சேவைகள் உடனடியாக வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் சிரமமின்றி மனுக்கள் அளிக்க வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்ற இந்த முகாமில், உடனடி தீர்வு பெற முடியாத மனுக்கள் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டது.