தருமபுரி, ஆக 02 | ஆடி 17 -
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப குடிமைப் பணிகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) கணினி வழி எழுத்துத் தேர்வு (CBT) தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 4 முதல் 10 வரை நடைபெறுகிறது. தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி. பள்ளிப்பட்டியில் உள்ள ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரி, பென்னாகரம் வட்டம் நல்லானூரில் உள்ள ஜெயம் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெறும். மொத்தம் 683 தேர்வர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர்.
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தினால் செய்யப்பட்டுள்ளதுடன், தேர்வு மையங்களுக்கு பேருந்துகள் செல்லும் வகையில் சிறப்பு போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்துக்குள் செல்ல வேண்டும்; தாமதமாக வருவோர் எந்த காரணத்திற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், தேர்வு மையங்களுக்குள் மொபைல் போன், புளுடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுவரக்கூடாது. தேர்வர்கள் தங்களது அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கடைசி நேர அலைச்சலை தவிர்க்க உரிய நேரத்திற்குள் மையத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.