ஏரியூர், ஆக. 28 (ஆவணி 12)
மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டு வளர்ப்பு துறை இணைந்து “என் பட்டு என் பெருமை” திட்டத்தின் கீழ், பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் கிராமத்தில் விவசாயிகளுக்கான களப் பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி டாக்டர் ராம் மகேஷ் அவர்கள் மல்பெரி தோட்ட பராமரிப்பு மற்றும் புழு வளர்ப்புமனை கிரிமினீக்கம் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவான செயல்விளக்க உரை வழங்கினார்.
சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று, பட்டு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களை நேரடியாக கற்றுக்கொண்டனர். குறிப்பாக மல்பெரி தோட்ட பராமரிப்பு பின் பரிசோதனை, நடவு பிந்தைய நீர் மேலாண்மை, உர மேலாண்மை, சொட்டு நீர் உரப்பாசனம், மண்வளம் பாதுகாப்பு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் நடைமுறை விளக்கத்துடன் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பென்னாகரம் பட்டு வளர்ச்சி துறையின் உதவி ஆய்வாளர்களான எம்.ஆர். கிருஷ்ணன், ரங்கசாமி, என்.கவிராஜ் மற்றும் உமாசங்கர் ஆகியோர் பங்கேற்று, விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர். பட்டு உற்பத்தி தரத்தை உயர்த்துவதற்கான நவீன முறைகளைப் பின்பற்றும் வகையில் இந்த பயிற்சி பெரும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

