தருமபுரி, ஆகஸ்ட் 5 | ஆடி 20 -
நடப்பு குருவை பருவம் KMS 2024-2025-இன் கீழ், மாநில அரசின் ஆணையின்படி, தருமபுரி மாவட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து நேரடியாக இராகி கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இணை ஆட்சித்தலைவர் திரு ரெ. சதீஸ், இ.ஆ.ப., வெளியிட்ட தகவலின்படி, கடந்த நவம்பர் 4, 2024 முதல், தருமபுரி வட்டத்தில் உள்ள தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் பென்னாகரம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திபட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்க கட்டிட வளாகம் ஆகிய இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை 592 விவசாயிகளிடமிருந்து மொத்தம் 777.150 மெ.டன் இராகி நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பருவத்தின் கொள்முதல் நடவடிக்கைகள் வரும் 31.08.2025-இல் முடிவடைகின்றன. எனவே, அறுவடை செய்யப்பட்ட இராகியை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களுடன், தருமபுரி மற்றும் பென்னாகரம் கொள்முதல் நிலையங்களில் நேரில் சமர்ப்பித்து இந்த அரசுத்திட்டத்திலிருந்து பயனடைய District Collector திரு ரெ. சதீஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.