தருமபுரி, ஆகஸ்ட் 5 | ஆடி 20 -
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்புச் சட்டம், 1997 (தமிழ்நாடு சட்டம் 44/97) பிரிவு 3-ன் கீழ் வெளியிடப்பட்ட உள் (காவல்-XIX) துறை ஆணை எண் 276, நாள் 02.09.2024-ற்கிணங்க இடைமுடக்கம் செய்யப்பட்ட “Perfect Vision Chits PVT Ltd” நிறுவனத்துடன் தொடர்புடைய அசையும் சொத்துகள் குறித்து நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவை TNPID சிறப்பு நீதிமன்றம் O.A.26/2025 என்ற வழக்கில், 02.04.2025 அன்று அளித்த தீர்ப்பின்படி, மேலே குறிப்பிடப்பட்ட சொத்துகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தருமபுரி மாவட்ட ஆட்சியரின் தலைமையில் வரும் 20.08.2025 அன்று காலை 11.00 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள முல்லை கூட்டரங்கில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ள ஏல நிபந்தனைகளை கவனமாக வாசிக்கலாம். ஏல நிபந்தனைகளின் கீழ், ஏலத்தில் யாரும் கலந்துகொள்ள முடியும். விற்பனைக்கு உள்ள சொத்து தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஒட்டப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில், மாருதி மெஸ் அருகில் அமைந்துள்ளது. இந்த சொத்தை, ஏலத்திற்கு முன் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பார்வையிட முடியும். இச்செய்தியை தருமபுரி தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.கவிதா அவர்கள் வெளியிட்டுள்ளார்.