பாலக்கோடு, ஆகஸ்ட் 10 | ஆடி 24 -
தர்மபுரி மாவட்டத்தின் குத்தலஅள்ளி, காட்டம்பட்டி, கம்மாளப்பட்டி பகுதிகளில், தேமுதிக சார்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரப் பயணத்தை, கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேற்கொண்டார். இந்நிகழ்வில் பொதுமக்களிடம் பேசிய அவர், “100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படவில்லை. விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் இல்லை. எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்து வைத்து, மக்களை மதுவில் பழக்கப்படுத்தி வருகின்றனர்.
மக்களின் துயரங்களை நன்கு அறிந்திருக்கிறேன். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான கூட்டணி அமைக்கப்படும். அப்போது வெற்றி வேட்பாளர்களுடன் நேரில் சந்திப்பேன்,” என்று தெரிவித்தார். பின்னர், காட்டம்பட்டியில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் டாக்டர் இளங்கோ, மாவட்ட செயலாளர்கள் விஜயசங்கர், குமார், ஒன்றிய செயலாளர் முனுசாமி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.