பாலக்கோடு, ஆகஸ்ட் 10, 2025 | ஆடி 25 –
பொன்னுசாமி (51) மற்றும் அவரது மனைவி தேவி, ஒரு மகன், ஒரு மகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் வீட்டு அருகே மலைப்பகுதி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிவன் (47), சூர்யா (27), நவீன் (25), கிருஷ்ணன் (65) ஆகியோர் பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் பழைய பொருட்கள் வாங்கும் கடைகள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் பிளாஸ்டிக், மின்ஒயர்கள், பேட்டரிகள் போன்ற இரசாயனக் கழிவுகளை அப்பகுதியில் எரித்து, இரும்பு, காப்பர் கம்பிகள், தகடுகள் உள்ளிட்டவற்றை பிரித்து எடுப்பதாக கூறப்படுகிறது.
இந்த எரிப்பினால் ஏற்படும் நச்சு புகை, அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக, பொன்னுசாமி புகார் அளித்தார். ஆனால், தொடர்ந்து எரிப்பு நடந்ததால் அவர் பாலக்கோடு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவன், சூர்யா, நவீன் ஆகியோர், பொன்னுசாமியின் வீட்டிற்கு சென்று சி.சி.டி.வி கேமராவை உடைத்ததுடன், மின் இணைப்பை துண்டித்து, செங்கற்களால் வீட்டின் கதவு மற்றும் மேற்கூரையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், மீண்டும் போலீசாருக்கு தகவல் அளித்தால், கல்லூரி செல்லும் மகன், மகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என மிரட்டியதாக பொன்னுசாமி புகார் அளித்துள்ளார். பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.