பாலக்கோடு, ஆக. 8 | ஆடி 23 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (24) மற்றும் மிட்டா ரெட்டி அள்ளி கிராமத்தைச் சேர்ந்த திவ்யஸ்ரீ (19) ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திவ்யஸ்ரீ, தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களின் காதலை அறிந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று முன்தினம் இரவு இருவரும் வீடுகளை விட்டு வெளியேறினர். பின்னர், நேற்று காலை பேளாரஅள்ளியில் உள்ள பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின், தங்களின் உயிர் பாதுகாப்பு கருதி பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார், இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேசினர். திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும், திவ்யஸ்ரீ தன்னுடைய கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால், போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். காதலித்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.