பாலக்கோடு, ஆக.06 | ஆடி 21 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேதியியல் துறையின் மாணவர் நலனை முன்னிட்டு, கலிலியோ ஆப்ஃஷோர் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று நடைபெற்றது. மாணவர்களின் தொழில்முனைவு வளர்ச்சி, தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆராய்ச்சி நுணுக்கங்களை மேம்படுத்தும் நோக்கத்தில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனம், அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகள், வழிகாட்டுதல், வாய்ப்புகள் மற்றும் தொழில் சார்ந்த அனுபவங்களை வழங்கி வருகின்றது.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் தீர்த்தலிங்கம், வேதியியல் துறைத் தலைவர் அன்பரசன், மற்றும் ஆசிரியர்கள் கதிர்வேல், வெற்றிஅரசு உள்ளிட்ட பலர் பங்கேற்று ஒப்பந்த நிகழ்வை சிறப்பித்தனர். இந்த ஒப்பந்தம், கல்லூரி மாணவர்களின் தொழில் வாய்ப்பு மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றத்திற்கு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.