பென்னாகரம், ஆக 03 | ஆடி 18 -
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நேற்று நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழா நிகழ்வில் அமைச்சர் பேசிய உரையைத் தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி குறித்து அவர் கூறியதாக தகவல் பரவியது.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் ஏரியூர் பட்டக்காரன் கொட்டாயை சேர்ந்த முத்துலிங்கம் என்கின்ற மந்திரி படையாட்சி என்ற பாமக நிர்வாகி, தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் குறித்து தரக்குறைவான பதிவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த பதிவை கண்டித்து, பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் திமுகவினர் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர். மனுவின் அடிப்படையில், பாமக நிர்வாகி முத்துலிங்கத்தை போலீசார் விசாரணைக்காக நிலையத்திற்கு அழைத்துவந்தனர்.
இந்த செய்தி பரவியதும், பாமகவினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவரை விடுதலை செய்ய கோரி போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போலீசார் விடுதலை செய்ய மறுத்ததால், பாமகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசாருக்கும் பாமக உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.