ஒகேனக்கல், ஆக 03 | ஆடி 18 -
ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் புனித நீராடி, காவேரி அம்மனை வழிபடுவது வழக்கம். தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுவை உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஒகேனக்கலுக்கு வருடம் தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிவர். எனினும், இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே காணப்படுகிறது.
ஆடி 18 இன்று காலை நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 14,000 கன அடி நீர் வரத்து பதிவாகியுள்ளது. நீர்வரத்து குறைந்ததால், அருவிகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் பயணிகள் புனித நீராடினர். புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து, காவேரி அம்மனை வழிபட்டனர். விழா நடைபெறும் பகுதிகளில் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், ஊர் காவல் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.