பென்னாகரம், ஆக.23 | ஆவணி 06 -
பென்னாகரம் அருகே உள்ள ஏரியூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் முதல்வர் விணுலோகேஸ்வரன் (33) மீது ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் புகார் எழுந்துள்ளது. சிடுவம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களான கண்மலர் – நடராஜ் தம்பதியினர், கடந்த 36 ஆண்டுகளாக இந்த பள்ளியை நடத்தி வருகின்றனர். இவர்களின் மகனான விணுலோகேஸ்வரன், திருமணமானவர், இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை, தற்போது பள்ளியின் முழு பொறுப்பையும் வகித்து வருகிறார்.
இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம், அவர் தகாத வார்த்தைகள் பேசிச் சீண்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். பெற்றோர் விசாரித்தபோது, மாணவி நடந்தவற்றை கதறி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பிரின்ஸ்பால் விணுலோகேஸ்வரனை கைது செய்துள்ளனர்.