தருமபுரி – கோம்பேரி மலை அடிவாரம் – காளிகரம்பு சாலை அமைக்க S.P. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை.
தகடூர்குரல்ஆகஸ்ட் 23, 2025
0
தருமபுரி, ஆகஸ்ட் 22, 2025 (ஆவணி 6):
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மிட்டாரெட்டியள்ளி – கோம்பேரி மலை அடிவாரம் முதல் கொண்டகரள்ளி – காளிகரம்பு வரை வனக்காப்பு காடுகளுக்குள் சாலை அமைக்க வேண்டும் என தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். பி. வெங்கடேஷ்வரன் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மை செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தச் சாலை அமைந்தால், தருமபுரி நகரத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் சென்னையைப் போன்ற பெருநகரங்களுக்கு தொடர்வண்டி மூலம் பயணம் செய்யவும், பொம்மிடி மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் மருத்துவம், கல்வி, வணிக சேவைகள் பெறவும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தில் இதுகுறித்து பேசியபோது, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அவர்கள் வனத்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்கி சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று உறுதி அளித்ததாகவும், ஆனால் தற்போது வழங்கப்பட்ட நிதி போதாமல் இருப்பதால் சாலை அமைப்பு நடைபெற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சாலை அமைப்பதற்கான முழு நிதியையும் வனத்துறைக்கு வழங்கி, போக்குவரத்து சாலை திட்ட மதிப்பீட்டு தொகையையும் விரைந்து ஒதுக்கி, இந்தப் பணியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என எம்.எல்.ஏ. தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.