பென்னாகரம், ஆக 14 | ஆடி 29 -
பென்னாகரம் அருகே அமைந்துள்ள மருதம் நெல்லி கல்விக் குழுமம் சார்ந்த ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் துறைகள் இணைந்து ‘அறிவியல் மற்றும் நிலையான தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள்’ குறித்த ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் கா. கோவிந்த் தலைமை வகித்தார். குழுமச் செயலாளர் காயத்ரி கோவிந்த், நிர்வாக இயக்குநர் முனைவர் எம். செந்தில் முன்னிலை வகித்தனர். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சி. பரஞ்சோதி மற்றும் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா. மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.
இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் சி. தமிழரசு வரவேற்புரை வழங்கினார். வேதியியல் துறையின் உதவிப் பேராசிரியர் பெருமாள், முதல் அமர்வின் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். முதல் அமர்வில் கோவை கரோன்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முனைவர் V. மாது, வேதியியல் மற்றும் வினையியக்கவியல் குறித்த ஆக்கபூர்வமான அறிவியல் தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்தார்.
இரண்டாம் அமர்வின் சிறப்பு விருந்தினரை தாவரவியல் துறைத் தலைவர் R. சிவசக்தி அறிமுகப்படுத்தினார். இதில், சென்னை ஸ்ரீ சாய்ராம் சித்தா மெடிக்கல் கல்லூரி முனைவர் P. முருகன், தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைகளில் உள்ள படிப்புகள் மற்றும் அவற்றின் வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான விளக்கத்தை வழங்கினார். நிகழ்வின் நிறைவுரையை வேதியியல் துறைத் தலைவர் மா. பாலாஜி வழங்கினார். நிகழ்வில் விலங்கியல் துறைத் தலைவர் ரா. ரவிக்குமார், பல துறை பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
.gif)

.jpg)