பாலக்கோடு, ஆகஸ்ட் 22 (ஆடி 6):
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பானையன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பூங்காவனம் (60) மற்றும் அவரது பேத்தி சுபத்ரா மீது நிலத்தகராறில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பூங்காவனத்துக்கும், அவரது தம்பி கோவிந்தராஜ் (52) என்பவருக்கும் நில தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 19ம் தேதி சுபத்ரா தனது வீட்டின் அருகே செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி உஷா (45) ஆகியோர் “வீடியோ எடுக்கக் கூடாது” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், இருவரும் சுபத்ராவை கல்லால் தாக்கியதுடன், தடுக்க வந்த அவரது தாத்தா பூங்காவனத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த பூங்காவனம் மற்றும் சுபத்ராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, மாரண்டஅள்ளி போலீசார் கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.