தருமபுரி, ஆகஸ்ட் 23 (ஆடி 7):
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையான தர்மபுரி அரசு மருத்துவமனை (GH) முதல் ரயில்வே நிலையம் வரை உள்ள சாலை தற்போது பல்வேறு சீர்கேடுகளால் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தச் சாலையில் குப்பைகள் குவிந்து கிடப்பது, துர்நாற்றம் வீசுவது, அலைந்து திரியும் தெருநாய்கள் அதிகமாக இருப்பது போன்ற பிரச்சினைகள் காரணமாக பாதசாரிகள் மற்றும் பயணிகள் தினசரி தொந்தரவுக்குள்ளாகின்றனர். குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், ரயில்வே ஸ்டேஷன் பயணிகள், மாணவர்கள் ஆகியோர் அதிக அளவில் இந்தச் சாலையைப் பயன்படுத்துவதால், சாலை சுத்தம் மற்றும் பாதுகாப்பு மிகவும் அவசியமானதாக உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், “இது மாவட்டத்தின் முக்கிய சாலை. ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பாதை என்பதால், நகராட்சி உடனடியாக குப்பை அகற்றுதல், சாலை பராமரிப்பு, தெருநாய் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.