பாலக்கோடு, ஆகஸ்ட் 20 (ஆவணி 4):
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டவை. இங்கு தென்னை, வாழை, மஞ்சள், கரும்பு போன்ற நீண்டகாலப் பயிர்களும், தக்காளி, முள்ளங்கி, கத்தரி, வெண்டை போன்ற குறுகியகாலப் பயிர்களும் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து வருவது, விளைச்சல் அதிகரித்தால் விலை குறைவது, விலை அதிகரிக்கும் போது விளைச்சல் குறைவது என விவசாயிகள் தொடர்ச்சியாக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நடப்பாண்டில் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பேளாரஹள்ளி, கொல்லுப்பட்டி, எலங்காளப்பட்டி, தும்பஹள்ளி, கொல்லப்பட்டி, வாழைத்தோட்டம், மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, அனுமந்தபுரம், அத்ததூரனஹள்ளி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,700 ஏக்கரில் கரும்பு பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் 6 முதல் 8 மாதங்கள் வளர்ச்சி பெற்ற கரும்புகள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், வேர்புழுக்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மண்ணுக்குள் வாழும் இந்த வேர்புழுக்கள் பின்னர் வண்டுகளாக மாறி கரும்பின் வேர் பகுதிகளைத் துளைத்து உள்வாங்குவதால் தாக்குதல் உடனடியாக கண்களுக்கு தெரியாமல் போகிறது. பச்சை நிறத்தில் இருந்த கரும்புகள் மஞ்சள் நிறத்திற்கு மாறிய பிறகே தாக்கம் புரியும் நிலையில் இருக்கும். ஆனால் அதற்குள் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்து, விவசாயிகள் அறுவடை இழப்பை சந்திக்கின்றனர். தற்போது இப்பகுதியில் மட்டும் சுமார் 1000 டன் கரும்புகள் வேர்புழு தாக்குதலால் முற்றிலும் நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டும் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து கரும்பு சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது கடுமையான நஷ்டத்தில் சிக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட கரும்புகளை உடனடியாக வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.